உ.பி. சட்டசபை தேர்தல்; 11 மணி நிலவரப்படி 21.39% வாக்குகள் பதிவு
உத்தர பிரதேச சட்டசபைக்கான 5வது கட்ட தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 21.39% வாக்குகள் பதிவாகி உள்ளன.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்குள்ள 12 மாவட்டங்களில் உள்ள அயோத்தி, அமேதி உள்ளிட்ட 61 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. 2.24 கோடி வாக்காளர்கள் உள்ள சுல்தான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துபவை ஆகும்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. 5-வது கட்ட தேர்தலில் துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட பிரபலங்கள் களம் காண்கிறார்கள். இதனை முன்னிட்டு உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 5வது கட்ட வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான முதல் 2 மணிநேர நிலவரப்படி, 8.02% வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. வாக்கு மையங்களில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என பிரயாக்ராஜ் நகர போலீஸ் உயரதிகாரி அஜய் குமார் தெரிவித்து உள்ளார்.
வாக்கு பதிவு அமைதியாக நடந்து வருகிறது. வாக்குகளை பெறுவதற்காக வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து, சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து காலை 11 மணி வரையிலான அடுத்த 2 மணிநேர நிலவரப்படி 21.39% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில், சித்ரகூட் மாவட்டத்தில் அதிக அளவாக 25.59% வாக்குகளும், பாரபங்கி மாவட்டத்தில் குறைந்த அளவாக 18.67% வாக்குகளும் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.