ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு 9-ந்தேதி விசாரிக்கிறது
ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு 9-ந்தேதி விசாரிக்கிறது.
புதுடெல்லி
தமிழகத்தின் ராமேசுவரத்துக்கும், இலங்கையின் தலைமன்னார்க்கும் இடையே அமைந்திருப்பது ராமர்பாலம். இதில் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் 5-வது மணல் திட்டோடு இந்திய எல்லை முடிவடைகிறது.
இந்த ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரிக்காமல் கிடந்தது. இதுகுறித்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபணா, ஹிமா கோக்லி அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார்.
இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்குடன், ஏனைய இடைக்கால மனுக்களையும் சேர்த்து மார்ச் 9-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.