மனைவியை கொன்று டாக்சி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

போலீசாக பணியாற்றி வரும் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-02-23 09:28 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தலைமை போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் சரோஜ். இவரது கணவன் தர்மேந்தர் (38 வயது). இவர் டாக்சி டிரைவராக உள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளார். இதற்கிடையில், கணவன் - மனைவி இடையே அவ்வப்போது சண்டை நிலவி வந்துள்ளது. 

இந்நிலையில், மகன் நேற்று இரவு டியூசன் சென்றிருந்தபோது தர்மேந்தர் - சரோஜ் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின் போது வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கட்டையால் மனைவி சரோஜை தர்மேந்தர் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் சரோஜ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

மனைவியை கொலை செய்த பின்னர் கணவன் தர்மேந்தர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டியூசன் சென்ற மகன் வீட்டின் கதவை தட்டியபோதும் பெற்றோர் திறக்காததால் அருகில் உள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கியுள்ளான்.

இதனை தொடர்ந்து, சரோஜ் - தர்மேந்தரின் மகன் இன்று காலை வீட்டிற்கு சென்று மீண்டும் கதவை தட்டியுள்ளான். அப்போது, கதவை பெற்றோர் திறக்காததால் அவன் அழுதுள்ளான். இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சரோஜ் ரத்த வெள்ளத்திலும் தர்மேந்தரன் தூக்கிட்ட நிலையிலும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

மேலும் செய்திகள்