நடிகை கடத்தல் வழக்கில் சாட்சியை மிரட்டியதாக புகார்; நடிகர் திலீப்புக்கு போலீஸ் நோட்டீஸ்
நடிகை கடத்தல் வழக்கின் சாட்சியான ஜின்சன் என்பவர் மிரட்டப்பட்ட புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி நடிகர் திலீப்க்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
திருவனந்தபுரம்,
நடிகை காரில் கடத்தல் வழக்கில் கைதான மலையாள நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக திலீப் உள்பட 6 பேர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கிலும் திலீப் நிபந்தனை ஜாமீன் பெற்று இருக்கிறார்.
2017ஆம் ஆண்டு நடிகை கடத்தல் வழக்கின் விசாரணையை மேலும் தாமதிக்க முடியாது என்று கேரள ஐகோர்ட்டு செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும், வழக்கு விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் இதன் காரணமாக, மார்ச் 1ம் தேதிக்குள் இறுதி விசாரணை அறிக்கையை சமர்பிப்பது கடினம் எனவும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காலக்கெடு ஏற்கனவே இரண்டு மாதங்களை தாண்டிவிட்டது. இனிமேலும் தாமதிக்க முடியாது என்று கூறினார்.
இதற்கிடையே, விசாரணையின் போது, திலீப் கேரள ஐகோர்ட்டில் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸ் அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும், என்மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் திலீப் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன் பிள்ளை மனுதாக்கல் செய்தார்.
இதனை ஏற்க கோர்ட்டு மறுத்து விட்டது. ஒரு வழக்கில் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உரிமை உள்ளது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நடிகை கடத்தல் வழக்கின் சாட்சியான ஜின்சன் என்பவர் மிரட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி திலீப்பின் வக்கீல் ராமன் பிள்ளைக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.