பெகாசஸ் ரிட் மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்க கோரி வக்கீல் எம்.எல்.சர்மா, மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், பரன்ஜோய் குஹா தாகூர்தா எஸ்.என்.எம். அபிதி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்ஸா சதாக்ஷி, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழுவை கடந்த அக்டோபர் 27-ந்தேதி அமைத்த நீதிமன்றம், பெகசாஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரித்து, உரிய பரிந்துரைகளை நிபுணர்கள் குழு 8 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கும் என உத்தரவில் தெரிவித்திருந்தது.
இதனிடையே இந்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரிக்க இருந்த நிலையில், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து அன்றைய தேதி விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழு இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பதாகவும், மேலும் அவகாசம் கோர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.