கவர்னரை நீக்க மாநில சட்டசபைக்கு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசுக்கு கேரளா பரிந்துரை
அரசியல் சாசனத்தை மீறும்போது கவர்னரை நீக்க மாநில சட்டசபைக்கு அதிகாரம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரளா பரிந்துரை செய்துள்ளது.
திருவனந்தபுரம்,
எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களில் அரசுக்கும், கவர்னர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா என பல மாநிலங்களில் இந்த புகார்கள் இருந்து வருகின்றன.
இதில் சில மாநிலங்கள், கவர்னரை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வெளிப்படையாகவே கோரிக்கையும் விடுத்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக நீதிபதி மதன் மோகன் தலைமையிலான புஞ்சி கமிஷன் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து இருக்கிறது. இந்த அறிக்கையை மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ள மத்திய அரசு, இந்த விவகாரத்தில் கருத்துகளை கேட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, கவர்னர்கள் தொடர்பாக கேரள அரசு பரிந்துரை ஒன்றை அளித்து இருக்கிறது. அதாவது, அரசியல் சாசனத்துக்கு எதிராக கவர்னர்கள் செயல்படும்போது, அவர்களை நீக்குவதற்கான அதிகாரத்தை மாநில சட்டசபைகளுக்கு வழங்க வேண்டும் என கேரள அரசு பரிந்துரைத்து இருக்கிறது.
கேரள சட்டத்துறை செயலாளர் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பரிந்துரைக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது. எனினும் மாநில அரசின் இந்த முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குறை கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனை நடத்தாமல் அவசர முடிவை எடுத்திருப்பதாக இந்த கூட்டணி தெரிவித்து உள்ளது. இதற்கிடையே ட்எல்லி சென்றுள்ள கேரள கவர்னர் முகமது ஆரிப் கானிடம், மாநில அரசின் இந்த பரிந்துரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் பதிலளிக்கையில், எந்த விவகாரம் தொடர்பாகவும் தனது கருத்தை தெரிவிக்க மாநில அரசுக்கு உரிமை இருப்பதாக கூறினார்.