கர்நாடகா: பஜ்ரங்தள் நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது
கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி ஹர்ஷா என்று கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம், சிவமொக்கா நகரை சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இவரை நேற்று இரவு சிலர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்தனர்.
இச்சம்பவம் சிவமொக்கா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட ஹர்ஷாவின் உடல் இன்று மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில், பஜ்ரங்தள் உள்பட இந்து அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனிடையே, ஹர்ஷா கொலைக்கு கண்டனம் தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது.
வன்முறையின் போது கடைகள், பஸ், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், சிவமொக்கா நகரில் பதட்டம் அதிகரித்தது. பதட்டத்தை தணிக்க நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பஜ்ரங்தள் பிரமுகர் கொலை வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை மந்திரி அரங்க ஜிஜேந்திரா தெரிவித்துள்ளார். இது தொடபாக அவர் கூறுகையில், எனக்கு கிடைத்துள்ள தகவல்படி, ஹர்ஷா கொலை வழக்கில் 5 பேருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.
கைதானவர்களின் பெயர் உள்ளிட்ட எந்த விவரத்தையும் மாநில உள்துறை மந்திரி வெளியிடவில்லை.