சாதி, மத அடிப்படையில் மனித இனத்தை பிரிக்க முடியாது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
சாதி, மத அடிப்படையில் மனித இனத்தை பிரிக்க முடியாது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
ஒரே குடும்பம்
ஒடிசா மாநிலம் பூரியில், கவுடிய மடத்தின் நிறுவனர் ஸ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாட்டின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நாடு முழுவதும் பல்வேறு மத பாரம்பரியங்களும், பழக்கவழக்கங்களும் நிலவி வருகின்றன. இருந்தாலும், உலகம் முழுவதும் ஒரு நம்பிக்கை உள்ளது. அதுதான், ஒட்டுமொத்த மனித இனத்தையும் ஒரே குடும்பமாக கருதி, அனைவரது நலனுக்காகவும் பாடுபடுவது ஆகும்.
கொரோனா போராளிகள்
உதவி தேவைப்படுவோருக்கு சேவை செய்வதற்கு இந்திய கலாசாரத்தில் உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மனித இனத்தையும், உண்மையையும் சாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பிரிக்க முடியாது. சமூகத்தின் நலன்தான் இறுதி இலக்கு.
உலகத்தில் இருந்து கொரோனா ஒழிய வேண்டும். கொரோனா காலத்தில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும், சேவை மனப்பான்மையுடன் திகழ்ந்தனர். அவர்களில் பலர் தங்கள் உயிரையே தியாகம் செய்தனர். இருப்பினும், அவர்களது அர்ப்பணிப்பு உணர்வு மங்காமல் இருந்தது. அந்த கொரோனா போராளிகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.