ஒர்க் பிரம் ஹோம்: ஒரே நேரத்தில் 6 கம்பெனிகளில் வேலை பார்த்து கோடீசுவரராகும் வாலிபர்

ஒர்க் பிரம் ஹோமில் ஒரே நேரத்தில் 6 கம்பெனிகளில் வேலை பார்த்து கோடீசுவரராகப்போகும் வாலிபர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Update: 2022-02-16 07:17 GMT
புதுடெல்லி

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் அனைவரின் பணிச்சூழலும் மாறியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய (Work From Home - WFH)  உத்தரவிட்டன. இது நன்றாக இருப்பதாக ஒரு தரப்பினரும், அலுவலகத்தில் பணி செய்வது போன்ற வசதி இல்லை என இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

பெரும்பாலான துறைகளில், ஐடி முதல் ஆன்லைன் கல்வி வரை இது ஓரளவுக்கு சாத்தியமாகி உள்ள நிலையில் ஒர்க் பிரம் ஹோம் மாடலே தொடருமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. 

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில நிறுவனங்களில் மட்டும் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணி செய்யும்  நிலை உள்ளது.

 இந்நிலையில் தான் வீட்டில் இருந்து பணி செய்யும் நபர் ஒருவர் ஒரே சமயத்தில் 6 இடங்களில் வேலை செய்வது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

‛ரெட்டிட்டர்' இணையதளத்தில் இளைஞர் ஒருவர் தனதுவீட்டில் இருந்து  பணி செய்யும் அனுபவம் குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

 அதில் அவர் கூறியுள்ளதாவது: 

நான் ஐரோப்பாவை சேர்ந்தவன். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த காலக்கட்டம் என்னை 2வது தொழில் செய்யும்படி உந்தி தள்ளியது. முயற்சித்ததன் மூலம் நான் தற்போது 6 வேலைகளை ஒரேநேரத்தில் செய்து வருகிறேன். இந்த பணிகள் அனைத்து முழுநேர பணிகளாகும். வீட்டில் இருந்து வேலை செய்வதாலே இது சாத்தியமானது.

இந்த ஆண்டு நான் 700 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5.27 கோடி) சம்பாதித்து விடுவேன். 40 வயதிற்குள் கோடீஸ்வரனாக மாறி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன். இந்த கனவை நினைவாக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

என் நிறுவனத்தினர் என்னை ஒரு டெவலப்பர் என்ற அளவில் மட்டுமே வைத்துள்ளனர். இந்த பணியை திறமையாக செய்வேன். நான் மற்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிடுவது கிடையாது. இதனால் நிறுவனமும் என்னை கண்டுக்கொள்ளாது'' என குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவை பலர் பாராட்டுகின்றனர். சிலர் விமர்சனம் செய்கின்றனர். 

கடந்த ஆறு மாதங்களில், 32 லட்சம் வேலை தேடுபவர்கள் தற்காலிக அல்லது நிரந்தரமாக வொர்க் பிரம் ஹோம் வேலைகளையே தேடியுள்ளனர். இதில், 57 சதவீத  தேடல்கள் நிரந்தர ரிமோட் வேலைகளாக இருந்தன என்று நாகுரி (Naukri ) தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்