தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி அவர் படித்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறும் மற்றொரு வீடியோ வெளியானது.
இந்த விவகாரத்தில் மதம் சார்பான பிரசாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தனது மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை கடந்த 31-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
இதனிடையே, மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு அரசு மற்றும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ப்பட்டது. மேலும், இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ள கருத்துக்களை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மனு சுப்ரீம் கோட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நிலுவையில் இருக்கும்போதே வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது முறையல்ல என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேலும், மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வாதத்தை பரீசிலித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துக்களை நீக்குவது தொடர்பான மனுவை விசாரிக்கிறோம். ஆனால், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடைவிதிக்க முடியாது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு படி இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கும்.
இந்த வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ள கருத்துக்களை நீக்குவது தொடர்பாக எதிர் மனுதாரரான மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை கவுரவ பிரச்சினையாக்க வேண்டாம் என தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துக்களை நீக்குவது தொடர்பான வழக்கு 4 வாரங்கள் கழித்து மீண்டும் நடைபெறும் என உத்தரவிட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.