3-வது அலையை எதிர்த்து போராட உதவியது, தடுப்பூசி - மத்திய சுகாதார மந்திரி பேட்டி
இந்தியா, கொரோனா 3-வது அலையை எதிர்த்து போராட தடுப்பூசி உதவியது என்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறினார்.
காந்திநகர்,
மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, குஜராத் மாநிலம், காந்திநகரில் நேற்று நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு தடுப்பூசி ஒரு பிரச்சினை அல்ல. போதுமான தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை.
அறிவியல் சமூகத்தின் அறிவுரையைப் பின்பற்றி 5 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முடிவு எடுக்கப்படும்.
இதுதொடர்பாக அரசு எந்த பரிந்துரையையும் இதுவரை பெறவில்லை. இனிவரும் நாட்களில், பரிந்துரையைப் பெற்று முடிவு எடுக்கப்படும். இது அரசியல் முடிவு அல்ல.
கொரோனாவுக்கு எதிராக 67 சதவீத குழந்தைகள் எதிர்ப்பு சக்தியைப்பெற்றிருப்பது கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது.
கொரோனாவின் 3-வது அலையை எதிர்த்து போராட இந்தியா தடுப்பூசியை திறம்பட பயன்படுத்தியது.
இந்தியா 3-வது அலையை எதிர்த்து போராட பெரிய அளவில் தடுப்பூசி உதவியதை உலகமெங்கும் உள்ள அமைப்புகளும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உறுதி செய்துள்ளன.
இந்தியா, உலகுக்கே தடுப்பூசி அளித்துள்ளது. மேலும் தடுப்பூசியை அதிவேகமாகவும் தயாரிக்க தொடங்கியது. 3-வது அலையில் இந்தியா தடுப்பூசியின் முதல் டோஸ்-ஐ 96 சதவீதத்தினருக்கு போட்டு முடித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.