நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கிய போதைப்பொருள் சந்தைகள் கண்டுபிடிப்பு - என்ஜினீயர்கள் உள்பட 22 பேர் கைது
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கிய போதைப்பொருள் சந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக என்ஜினீயர்கள் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி, குஜராத், மராட்டியம், கர்நாடகம், அசாம், பஞ்சாப், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் டி.என்.எம். இந்தியா, டி.ஆர்.இ.டி., தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் என்னும் 3 போதைப்பொருள் சந்தைகள் இயங்கி வந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் சந்தைகள், டார்க்நெட் என்று அழைக்கப்படுகிற முகவரியற்ற தகவல் தொடர்புக்கான சிறப்பு மென்பொருள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நவீன தகவல் தொடர்பு வழிமுறைகளை பயன்படுத்தி மட்டுமே அணுகக்கூடிய மறைவான இணைய தளங்களை பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளன.
அது மட்டுமல்ல, இவற்றில் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களும் அரங்கேறி உள்ளன.
இதையெல்லாம் என்.சி.பி. என்று சொல்லப்படக்கூடிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு படைப்பிரிவு கண்டுபிடித்து, நாட்டையே அதிர வைத்துள்ளது.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, போலந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து கூரியர் மற்றும் இந்திய அஞ்சல் நெட்வொர்க்கை பயன்படுத்தி போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வந்துள்ளன.
இந்த கடத்தல்களில் தொடர்புடையவர்கள் 20-35 வயது பிரிவினர். அவர்களில் என்ஜினீயர்கள், சாப்ட்வேர் வல்லுனர்கள், ஒரு டாக்டர், நிதி ஆலோசகர்கள், தொழில் அதிபர்கள், எம்.பி.ஏ. பட்டதாரி, இசைக்கலைஞர் என பல தரப்பினரும் உண்டு. பள்ளியில் படித்து இடையில் நின்றவர்களும் இந்தக் கும்பலில் இருக்கிறார்கள்.
இந்த போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வேட்டையில் போதை மாத்திரைகள், ஹெராயின், பேஸ்ட் மற்றும் திரவ வடிவிலான கஞ்சா, கொகைன், போதை சாக்லேட் என விதவிதமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரூ.22.5 லட்சம் ரொக்கமும் சிக்கியது. ரூ.2 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இதன் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல்களை டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் படையின் துணைத்தலைமை இயக்குனர் கியானேஷ்வர் சிங் நேற்று நிருபர்களிடம் வெளியிட்டார்.