பா.ஜ.க.வில் இணைந்த பிரபல மல்யுத்த வீரர்

பா.ஜ.க.வில் பிரபல மல்யுத்த வீரர் தி கிரேட் காளி இன்று இணைந்துள்ளார்.

Update: 2022-02-10 08:33 GMT



புதுடெல்லி,


பிரபல மல்யுத்த வீரர் தி கிரேட் காளி டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு இன்று வருகை தந்துள்ளார்.  அவரை கட்சி நிர்வாகிகள் முறைப்படி வரவேற்றனர்.

இதன்பின்னர், அவர் தன்னை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டார்.  அவருக்கு கட்சியில் சேர்ந்ததற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.

தொழில்முறை மல்யுத்த வீரரான தலீப் சிங் ராணா என்ற தி கிரேட் காளி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை கடந்த ஆண்டு நவம்பரில் நேரில் சந்தித்து பேசினார்.  பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.

இந்த நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தனது ஆதரவை காளி வழங்கினார்.

கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் ஆற்றியுள்ள பணிகளுக்கு காளி பாராட்டுகளை தெரிவித்ததுடன், சமூக நலனுக்காக, சாத்தியப்பட்ட அனைத்து வழிகளிலும் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.  இந்நிலையில், அவர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

மேலும் செய்திகள்