தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடியா...? போலீஸ் எஸ்.பி. விளக்கம்
கர்நாடகாவில் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றம் என்ற குற்றச்சாட்டுக்கு போலீஸ் எஸ்.பி. விளக்கம் அளித்து உள்ளார்.
சிவமொக்கா,
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் வன்முறையாக வெடித்துள்ள சூழலில் சிவமொக்கா நகரில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர். அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடியும் காணப்பட்டனர்.
இந்நிலையில் சிவமொக்கா எஸ்.பி. லட்சுமி பிரசாத் கூறும்போது, காவி கொடி ஏற்றப்பட்டது. ஆனால், அந்த கொடி கம்பத்தில் தேசிய கொடி இல்லை. அதனை நீக்கி விட்டு காவி கொடியை ஏற்றவும் இல்லை. அவர்கள் காவி கொடியை மட்டுமே கம்பத்தில் ஏற்றினர். அதன்பின்பு அவர்களை அந்த கொடியை கீழே இறக்கி விட்டனர் என கூறியுள்ளார்.