மாசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 12-ந் தேதி திறப்பு
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 12-ந் தேதி திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 12-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறு நாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகளை நிறைவேற்றுவார். தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலசாபிஷேகம், கலசபூஜை, அத்தாழ பூஜை போன்றவைகள் நடைபெறும்.
5 நாட்கள் நடைபெறும், சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு 17-ந் தேதி இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின்னர் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படுகிறது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான ஆன் லைன் முன் பதிவு நேற்று தொடங்கியது. தரிசனத்திற்கு முன் பதிவு செய்த பக்தர்கள், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசனத்திற்கு 72 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும்.
நடை திறக்கப்படுவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் உள்பட மாவட்ட தலைநகரங்களில் இருந்து நிலக்கல் - பம்பைக்கு கேரள போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.