“உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி” - ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு

மற்ற மாநில மக்களைப் போல தமிழக மக்களும் எனது சகோதர, சகோதரிகள் தான் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-03 15:23 GMT
புதுடெல்லி,

மக்களவையில் நேற்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது’ என கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து தமிழகத்தைப் பற்றி பேசிய அவர், “நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. 

ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

மக்களவையில் ராகுல் காந்தி நிகழ்த்திய உரை, நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில், ராகுல் காந்திக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இது குறித்து டுவிட்டர் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரைக்கு, அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் பதிவை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி” என தமிழில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், மற்ற மாநில மக்களைப் போல தமிழக மக்களும் எனது சகோதர, சகோதரிகள் தான் என குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் பன்முக தன்மை வாய்ந்த கூட்டாட்சி சிந்தனையில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்