காஷ்மீர்: பயங்கரவாத அச்சுறுத்தலால் 30 ஆண்டுகளாக மூடப்பட்ட கிறிஸ்தவ மத வழிபாட்டு தளம் மீண்டும் திறப்பு

காஷ்மீரில் 1989 ஆம் ஆண்டு மூடப்பட்ட கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளம் புனரமைக்கப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-23 14:53 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகர் டல்கேட் பகுதியில் 1896 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளம் அமைந்துள்ளது. செயின் லூகா தேவாலயம் என்ற இந்த மத வழிபாட்டுத்தளத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மத மக்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

இதற்கிடையில், காஷ்மீரில் 1989 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன. அந்த சமயத்தில் காஷ்மீரில் இருந்த இந்து, கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட மதத்தினை பின்பற்றபற்றுபவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால், இந்த மதங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். அவர்களின் மத வழிபாட்டுத்தளங்களும் கைவிப்பட்டன. 

அந்த வகையில் டல்கேட் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளத்தையும் கிறிஸ்தவர்கள் கைவிட்டு சென்றனர். இதனால், அந்த மத வழிபாட்டுத்தளம் மிகுந்த சேதமடைந்தது.

இந்த நிலையில், டல்கேட் பகுதியில் உள்ள அந்த கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. யூனியன் பிரதேச அரசு இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. 

இந்நிலையில், ஸ்ரீநகர் டல்கேட்டில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளம் இன்று பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. 1989-ல் மூடப்பட்ட இந்த மத வழிபாட்டுத்தளம் 32 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றது. 

புனரமைக்கப்பட்ட இந்த வழிபாட்டுத்தளத்தை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா காணொளி காட்சி மூலம் இன்று பொதுமக்கள் பிரார்த்தனைக்காக திறந்து வைத்தார். கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த வழிபாட்டுத்தளத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளம் மீண்டும் திறக்கப்பட்டத்தை ஸ்ரீநகரில் வசித்து வரும் கிறிஸ்தவ மதத்தினர் வரவேற்றுள்ளனர். 

மேலும் செய்திகள்