நளினிக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு முடிவு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்.
இந்த நிலையில் நளினியின் தாயார் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் "கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனக்கு உடல்நிலை சரி இல்லை. அதனால் தமிழக அரசிடம் தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன்.இந்த கோரிக்கை மீது எந்த பதிலும் அளிக்காமல் தமிழக அரசு மௌனம் காத்து வருகிறது அதனால் தனது மகளுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டு கொள்கிறேன் " என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி "தமிழக அரசு நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்துருப்பதாக தெரிவித்தார்.
பத்மா தொடர்ந்த வழக்கின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.