அரசு தேர்வுகள் எழுதுவதில் ஆள்மாறாட்டம் - 5 பேர் கொண்ட கும்பல் கைது
அரசு தேர்வுகள் எழுதுவதில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றும் மத்திய, மாநில அரசு வேலைக்கான தேர்வுகளில் ஆள்மாற்றட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. பணத்தை பெற்றுக்கொண்டு உண்மையான தேர்வாளருக்கு பதிலாக வேறு நபர் ஆள் மாறாட்டம் செய்து போட்டிதேர்வுகளில் வெற்றி பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநிலத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் ஒரு கும்பல் ஆள்மாற்றட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலை தொடர்ந்து நேற்று அந்த மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மத்திய மற்றும் மாநில அரசு தேர்வுகள் எழுதுவதில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலை சேர்ந்தவர்கள் உண்மையாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆள் மாறாட்டத்தில் ஈடுபட ஒரு நபருக்கு தலா 6 முதல் 7 லட்ச ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.
மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வில் வெற்றிபெற்ற வைத்துவிடுவோம் என்ற உறுதியளிப்புடன் இந்த ஆள்மாறாட்டத்தில் அந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த ஆள்மாறாட்ட கும்பலில் தலைவன் தப்பியோடிவிட்டதால் அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.