கேரளா: ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் விடுமுறையில் சென்றால் பணி நீக்கம்: ஐகோர்ட்டு அதிரடி
அரசு உதவி பெறும் பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு மேல் விடுமுறையில் சென்றால் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று அம்மாநில ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜோசப். இவர் மலப்புரத்தில் உள்ள ஒரு தனியார் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கிலாந்து சென்றுவிட்டார். 5 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வந்த அவர் மேலும் 5 ஆண்டுகள் விடுமுறை வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தார். ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை ஏற்க மறுத்து விட்டது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஜோசப் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கர் நம்பியார் மற்றும் சி.பி.முகம்மது நியாஸ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
நீண்ட நாள் விடுமுறையில் செல்லும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், கேரள கல்வி சட்ட விதி எண் 56 (4) பிரிவைத்தான் பின்பற்ற வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் விடுமுறை முடிந்த பின்னரும் பணியில் சேராத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது எனவே பள்ளி நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான் என்று தீர்ப்பு கூறிய நீதிபதிகள் ஆசிரியர் ஜோசப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.