ஒமைக்ரானுக்கு எதிராக பைசர் தடுப்பூசியின் செயல் திறன் எவ்வளவு? புதிய தகவல்
ஒமைக்ரான் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியா உள்பட 63-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் கால்பதித்து விட்டது.
லண்டன்,
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா எனும் கொடிய வைரஸ் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இந்த கொலைகார வைரசை அழிப்பதற்கான ஒரே ஆயுதமான தடுப்பூசி கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. உலகம் முழுவதும் பல்வேறு வகையிலான தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் அதே வேளையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது உருவை மாற்றி வெவ்வேறு வகையிலான வைரசாக உருவெடுத்து வருகிறது.
அந்த வகையில் ஆல்பா, பீட்டா, டெல்டா என அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றின. இதில் டெல்டா வகை கொரோனா உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சூழலில் தற்போது அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆனால் மக்கள் இதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் மற்றொரு உருமாறிய கொரோனா வைரஸ் வந்துவிட்டது.‘ஒமைக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த மாதம் 24-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
இந்த உருமாறிய ஒமைக்ரான் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியா உள்பட 63-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் கால்பதித்து விட்டது. இந்த வைரஸ் டெல்டா வைரசை விட அதிக வீரியமிக்கது மற்றும் அதிவேகத்தில் பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரான் பாதிப்பால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்த செய்தியும் நேற்று உலக நாடுகளை அதிர வைத்தது. தடுப்பூசியின் செயல் திறன் குறித்த ஆய்வுகள் நீடித்து வருகின்றன.
இந்த நிலையில், பைசர் தடுப்பூசி ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 70 சதவீதம் வரை குறைப்பதாக தென் ஆப்பிரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 33 சதவீதம் ஒமைக்ரான் தொற்று ஏற்படாமல் தடுப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஒமைக்ரானுக்கு எதிராக பைசர் நல்ல பாதுகாப்புத்திறனை அளிப்பது தெரியவந்துள்ளது.