வாரணாசியில் கால பைரவர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
வாரணாசி,
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டிய பகுதிகள் நவீன முறையில் புணரமைக்கப்பட்டு உள்ளது. புனித நீராடி விட்டு, தண்ணீரை எடுத்து வந்து கோவிலில் அபிஷேகம் செய்யும் சம்பிரதாய பணியில் பக்தர்கள் ஏராளமான இடையூறுகளை சந்தித்து வந்தனர்.
இதை கருத்திற்கொண்டு, ரூ.339 கோடி செலவில் கோவிலில் இருந்து கங்கை நதிக்கரை வரை பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தங்கும் அறைகள், அருங்காட்சியகம், பார்வையாளர் மாடம், சுற்றுலா மையம், உணவு கூடங்கள் என மொத்தம் 23 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோவிலின் நுழைவாயில் மற்றும் இதர கட்டுமானங்கள், பாரம்பரிய முறைப்படி கற்கள் மற்றும் இதர மூலப்பொருட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் இந்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற உள்ளது இதற்காக, புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வாரணாசி வந்த பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கு ஆரத்தி எடுத்து கால பைரவர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்தார். பிரதமர் வருகையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.