மண்டல பூஜை; அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து 22-ந் தேதி புறப்படுகிறது
மண்டல பூஜையன்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து 22-ந் தேதி புறப்படுகிறது,
திருவனந்தபுரம்,
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடந்து வருகிறது.
சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி அய்யப்ப சாமியை தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) நடக்கிறது. காலை 11.55 முதல் பகல் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் பாலராம வர்மா மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 சவரன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும்.
இந்த தங்க அங்கி, பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி, தங்க அங்கி 22-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு ெசல்லப்பட உள்ளது.
அன்றையதினம் சிறப்பு பூஜைகளுக்கு பின், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் சபரிமலைக்கு புறப்படும். அன்று இரவு ஓமல்லூரிலும், 23-ந் தேதி இரவு கோண்ணியிலும், 24- ந் தேதி பெரிநாட்டிலும் தங்கி இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
அதன்பின்னர் 25-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு தங்க அங்கி வந்து சேரும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். அதை அவர்கள் 18-ம் படி வழியாக கொண்டு சென்று மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பார்கள்.
அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் 26-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பின்னர் பகல் 11.55 மணி முதல் 1 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும்.
அதன் பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படுவதையொட்டி, 25-ந்தேதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மகர விளக்கையொட்டி, அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் ( ஜனவரி) 14-ந் தேதி நடக்கிறது. தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதை தொடாந்து, பம்பை, சன்னிதானம் மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.