லுங்கி அணிந்தவர்கள் மீதான பா.ஜ.க.வின் சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி!

லுங்கி அணிந்தவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல என காங்கிரஸ் தலைவர் ரஷித் அல்வி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-05 05:53 GMT
புதுடெல்லி,

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் வியாபாரிகள் சம்மேளனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில துணை-முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. அவர் பேசியதாவது, 

‘உத்தரப்பிரதேசத்தில் முந்தைய ஆட்சிக் காலங்களில் லுங்கியும் தொப்பியும் அணிந்தவர்கள் தான்  சட்ட ஒழுங்கு சமநிலைக்கு சவாலாக இருந்தனர். 2017ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் அத்தகைய குற்றவாளிகளை காண முடியவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ரஷித்  அல்வி பதிலடியாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, 

‘லுங்கி அணிந்தவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல. அப்படிப் பார்த்தால் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பாதிக்குப்பாதி இந்து மதத்தினர்  லுங்கி அணிகின்றனர். அவர்களை எல்லோரையும் சேர்த்து மவுரியா, குற்றவாளிகள் என்று குறிப்பிடுகிறார் போலும். 

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கி பேசுகிறார்கள்.பொதுமக்கள் பா.ஜ.க.வின் தந்திரத்தை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். பா.ஜ.க உண்மையை கண்டு அஞ்சுகிறது’ என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் செய்திகள்