‘ஜாவத்’ புயல் நாளை கரையை கடக்கும் 64 பேரிடர் மீட்பு படைகள் தயார்
ஒடிசா பூரி கடற்கரை பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) புயல் கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று புயலாக மாறியது. ‘ஜாவத்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் மேற்கு-மத்திய வங்க கடற்கரை பகுதியை இன்று (சனிக்கிழமை) காலை அடையும்.
அதன்பிறகு வடக்கு-வடகிழக்குப்புறமாக ஒடிசா, ஆந்திரா கடற்கரை பகுதியில் நகர்ந்து, ஒடிசா பூரி கடற்கரை பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) புயல் கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயலின்போது பலத்த காற்றுடன் கனமழை பொழியும் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ‘ஜாவத்’ புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள 64 தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அதன் டைரக்டர் ஜெனரல் அதுல் கர்வால் நேற்று டெல்லியில் தெரிவித்தார்.