கர்நாடகத்தில் பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி சிறுமி உள்பட 3 பேர் சாவு
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி சிறுமி உள்பட 3 பேர் பலியானார்கள்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி சிறுமி உள்பட 3 பேர் பலியானார்கள்.
3 மாவட்டங்களில் மழை
கர்நாடகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு மின்னல் தாக்கி 6 போ் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் பல்வேறு பகுதிகளில் பலத்த பெய்தது.
நேற்று முன்தினம் மாலையில் பாகல்கோட்டை, கலபுரகி, விஜயாப்புரா ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அப்போது பலத்த சூறைக்காற்றும் வீசியது. அந்த 3 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்தது.
விஜயாப்புரா மாவட்டம் இன்டி தாலுகா அகிரசங்கே கிராமத்தில் பலத்த மழையின் போது துக்காராம் (வயது 32) என்பவர் தன்னுடைய தோட்டத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பலத்தகாயம் அடைந்து அவர் அங்கேயே இறந்து விட்டார்.
சிறுமி சாவு
இதேபோல், பாகல்கோட்டை மாவட்டம் இலக்கல் தாலுகா கட்டகாலா கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் மல்லம்மா (8) நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே உள்ள மரத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்தாள். அப்போது மல்லம்மாவை மின்னல் தாக்கியது.
படுகாயம் அடைந்த சிறுமி உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மல்லம்மா உயிர் இழந்து விட்டாள்.
இதுபோன்று, கலபுரகி மாவட்டம் ஆலந்தாவில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் அருணா (18) என்பவர் உயிர் இழந்தார். இது குறித்து ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.