கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவையில்லை என அறிவிப்பு
கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவை என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பெங்களூரு,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை, அனைத்து மாநிலங்களிலும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டிலேயே மராட்டியத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஆனால் கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைவாக இருந்த போது மராட்டியம், கேரளா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இந்த 4 மாநிலங்களில் இருந்தும் கர்நாடகத்திற்கு வருபவர்கள், கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை(கொரோனா நெகடிவ் சான்றிதழ்) கொண்டு வருவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக அரசு அந்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இனி மராட்டியம் உள்பட அந்த 4 மாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர தேவை இல்லை என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.