ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் மரணங்களுக்கு யார் பொறுப்பு என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் - பிரியங்கா காந்தி
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் மரணங்களுக்கு யார் பொறுப்பு என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், ஆக்சிஜன் விநியோகம் தொடர்பான வழக்கு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது குற்றச்செயல், அதுமட்டுமின்றி இது இனப்படுகொலைக்கு குறைவானதில்லை’ என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
ஆக்சிஜனுக்கு தட்டுப்பாட்டை உத்தரபிரதேச அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களையும் உத்தரபிரதேச அரசு மிரட்டுகிறது.
ஆனால், உண்மை என்னவென்றால் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு என்பது நிர்ணயிக்கப்படவேண்டும்’ என்றார்.