நந்திகிராம் தொகுதியில் தோல்வி; நீதிமன்றம் செல்வேன் மம்தா பானர்ஜி
நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் இதற்காக நீதிமன்றம் செல்வேன் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், நந்திகிராம் தொகுதிக்கான முடிவுகள் அறிவிப்பில் சில குளறுபடிகள் நடந்துள்ளன என்று எனக்கு தகவல்கள் வந்துள்ளன என்று இந்த தொகுதியில் போட்டியிட்ட முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு கூறினார். தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ணும்படி அவர் கடிதமும் எழுதினார்.
இதன்பின் டுவிட்டரில், நந்திகிராம் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையவில்லை. அதனால் யாரும் யூக அடிப்படையில் எதனையும் கூற வேண்டாம் என்று கூறினார். எனினும், வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த கோரிய அவரது வேண்டுகோளை தேர்தல் ஆணையம் இரவில் நிராகரித்தது.
இதுபற்றி மம்தா பானர்ஜி கூறும்பொழுது, நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பு வழங்க விரும்புகிறார்களோ அதனை வழங்கி விட்டு போகட்டும். அதனை ஏற்று கொள்கிறேன். மிக பெரிய வெற்றி கிடைப்பதற்கு நந்திகிராம் தொகுதியை தியாகம் செய்ய வேண்டி இருந்துள்ளது. நாங்கள் மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என கூறியுள்ளார்.
எனினும் அவர், சில முறைகேடுகள் நடந்துள்ளன என்று எனக்கு தகவல்கள் வந்துள்ளன. அதனால் நான் நீதிமன்றம் செல்ல இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.