லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்; மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவு
லஞ்ச ஒழிப்பு பிரிவுகளில் ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முக்கியமான பொறுப்புகள்
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், அனைத்து மத்திய அரசுத் துறை செயலாளர்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:-
லஞ்ச ஒழிப்பு பிரிவு அல்லது லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்புகள் மிகவும் முக்கியமானவை. அம்மாதிரியான பொறுப்புகளில் ஒரு அலுவலர் ஒரே இடத்தில் தேவையின்றி நீண்டகாலம் பணிபுரிவது, தனிப்பட்ட விருப்பங்களை வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும். அவர்கள் மீது தேவையற்ற புகார்கள், குற்றச்சாட்டுகளும் எழக்கூடும்.
அதிகபட்சம் 3 ஆண்டுகள்
இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதியும், வெளிப்படைத்தன்மை, அணுகுமுறையில் ஒரேமாதிரியான நிலை போன்றவற்றை உறுதிப்படுத்தவும், லஞ்ச ஒழிப்பு ஆணையம் அதன் முந்தைய வழிகாட்டு முறையில் மாற்றம் செய்யத் தீர்மானித்துள்ளது.அதன்படி, லஞ்ச ஒழிப்பு பிரிவில் உயர் அலுவலர்கள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை ஒரே இடத்தில் பணிபுரிவதற்கான காலம் 3 ஆண்டுகளாக வரையறுக்கப்படுகிறது.லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஒரு இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மேலும் 3 ஆண்டுகாலம் அதே பிரிவில் பணியாற்ற அனுமதிக்கப்படலாம். ஆனால் அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.
கட்டம் கட்டமாக
அவ்வாறு இடமாற்றம் செய்யும்போது, அதிக காலம் பணிபுரிந்தவர்கள் என்ற வரிசை அடிப்படையில் கட்டம் கட்டமாக மாற்றம் செய்ய வேண்டும். அதில் ஒரே இடத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் முதலில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.ஒரு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் இருந்து ஒருவரை வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்தால் மறுபடி அவரை லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணிபுரிய அனுமதிப்பதற்கு 3 ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்.
10 சதவீத ஊழியர்கள்
மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களை இடமாற்றம் செய்யும் பணியின் முதல்கட்டத்தில் குறைந்தபட்சம் 10 சதவீத ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அதில், அதிக காலம் பணிபுரிந்தவர்கள் என்ற வரிசையில், விதிவிலக்கு இன்றி இடமாற்ற உத்தரவு இருக்க வேண்டும். இந்த முதல்கட்ட இடமாற்ற, நியமன நடைமுறையை இந்த ஆண்டு மே 31-ம் தேதிக்குள் முடிக்கலாம். ஒரு இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனைவரையும் இடமாற்றம் செய்யும் நடைமுறையை 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இடமாற்ற, நியமன நடவடிக்கையில்,
கொரோனா தொற்று தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.