டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்: இரண்டு வாரங்களில் 12 ஆயிரம் பேருக்கு அபராதம்
டெல்லியில் கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இரண்டு வாரங்களில் 12 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ள டெல்லியில், தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. கொரோனா கால விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு துணைநிலை கவர்னர் அனில் பைஜால் சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதையடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து சலான் வழங்கப்படுகிறது. இதுபற்றி டெல்லி போலீஸ் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சின்மாய் பிஸ்வால் கூறுகையில், “கொரோனா கால விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என கூறினார்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டுமே இப்படி கொரோனா கால விதிமுறைகளின்படி முக கவசம் அணியாததற்காக 11 ஆயிரத்து 800 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 125 பேர் தனி மனித இடைவெளியை பின்பற்றாததற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரையில் முக கவசம் அணியாத 5 லட்சத்து 36 ஆயிரத்து 256 பேருக்கும், தனி மனித இடைவெளியை பின்பற்றாத 38 ஆயிரத்து 631 பேருக்கும் அபராதம் விதித்து சலான் அளிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.