குடகில் ஒரே குடும்பத்தில் 6 பேர் எரித்து கொலை
குடகில் ஒரே குடும்பத்தில் 6 பேர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். தலைமறைவான அந்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
குடகு: குடகில் ஒரே குடும்பத்தில் 6 பேர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். தலைமறைவான அந்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
காபி தோட்ட தொழிலாளி
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா முகுடகேரி கிராமம் கானூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் எரவர போஜா (வயது 55).காபி தோட்ட தொழிலாளியான இவரது மனைவி பேபி (45). இந்த நிலையில் எரவர போஜா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்து வந்துள்ளார்.
மேலும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த எரவர போஜா, மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் மனம் உடைந்த பேபி, கணவரை விட்டு பிரிந்து அருகில் உள்ள தனது தங்கை சீதா (40) என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். சீதா, ஷெட்டியப்பா என்பவரின் லைன் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவியுடன் தகராறு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அங்கு வந்த எரவர போஜா, மனைவி பேபியுடன் தகராறு செய்துள்ளார். அவரை பேபி மற்றும் குடும்பத்தினர் தாக்கி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அங்கிருந்து கடும் ஆத்திரத்துடன் சென்றுள்ளார். இதையடுத்து சீதா, பேபி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டில் படுத்து தூங்கினர்.
இதற்கிடையே எரவர போஜா அதிகாலை 2 மணி அளவில் பேபி தங்கியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டு கதவை வெளிப்புறமாக அவர் பூட்டியுள்ளார். மேலும் வீட்டின் மேற்கூரை ஓடுகளை பிரித்த அவர் வீட்டுக்குள் இறங்கி ஜன்னல் கதவுகளையும் மூடியுள்ளார். பின்னர் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
6 பேர் எரித்துக்கொலை
வீடு முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததால், தீயில் சிக்கி பேபி, சீதா, சிறுமி, சிறுவர்கள் என 6 பேர் உடல் கருகினர். அவர்கள் வேதனையில் அலறினர். அவர்களது அலறல் சத்தம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். சீதா வீடு தீப்பிடித்து எரிவதையும், கரும்புகை வெளியேறுவதையும் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர்.
அதன் பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பேபி, சீதா, பிரார்த்தனா (6) ஆகியோர் உடல் கருகி கரிக்கட்டையாகி பிணமாக கிடந்தனர். மேலும் 3 சிறுவர்கள் உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 3 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதாவது பிரகாஷ் (7), விசுவாஸ் (5), விகாஷ் (3) என்பது தெரியவந்தது. இதனால் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
போலீஸ் விசாரணை
இந்த கொடூர சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷமா மிஸ்ரா மற்றும் பொன்னம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டுக்குள் பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொன்னம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவி பேபியுடன் அடிக்கடி குடிபோதையில் எரவர போஜா தகராறு செய்து வந்ததும், இதனால் பேபி அவருடன் சேர்ந்து வாழாமல் தங்கை வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார். இருப்பினும் அங்கு சென்றும் எரவர போஜா தகராறு செய்து வந்துள்ளார்.
அதுபோல் நேற்று முன்தினமும் மனைவியுடன் அவர் தகராறு செய்துள்ளார். அப்போது அவரை குடும்பத்தினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எரவர போஜா, நேற்று அதிகாலை 2 மணி அளவில் பேபி குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததும், இதில் 6 பேர் உடல் கருகி பலியானதும் தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து பொன்னம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட எரவர போஜா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடும்பத் தகராறில் மனைவி உள்பட 6 பேரை தொழிலாளி எரித்துக்கொன்ற சம்பவம் குடகு மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.