அம்பானி வீட்டின் அருகே காரில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகளை வாங்கிய போலீஸ் அதிகாரி - என்.ஐ.ஏ. தகவல்
அம்பானி வீட்டின் அருகே காரில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளை வாங்கியது கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே தான் என என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.
மும்பை,
பிரபல தொழில் அதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் அன்டிலா வீடு தென்மும்பை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அந்த காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் கடந்த மாத தொடக்கத்தில் தானே கழிமுகத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது கொலைக்கும், போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவை கைது செய்து உள்ளது.
இந்நிலையில், அன்டிலா வீடு அருகே காரில் வெடிகுண்டுகளை வைத்ததாக கைதான போலீஸ் சச்சின் வாசே ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தது. இந்தநிலையில் அம்பானி வீட்டின் அருகே காரில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகளை வாங்கியதும் சச்சின் வாசே தான் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் சச்சின் வாசேவும் அவரது டிரைவரும் சேர்ந்து அம்பானி வீட்டின் அருகே காரை நிறுத்தியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் அவர் வெடிகுண்டுகளை எங்கிருந்து வாங்கினார் என்ற தகவல் தெரியவரவில்லை. அதுகுறித்து கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.