நீதிபதியிடம், இளம்பெண் வாக்குமூலம் எதிரொலி; முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கைது ஆகிறார்?
ஆபாச வீடியோ விவகாரத்தில் நீதிபதியிடம், இளம்பெண் வாக்குமூலம் அளித்திருப்பதன் எதிரொலியாக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கைதாக வாய்ப்புள்ளது. இதையடுத்து, மூத்த வக்கீல்களுடன், ஜார்கிகோளி சகோதரர்கள் ஆலோசனை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் நீதிபதியிடம், இளம்பெண் வாக்குமூலம் அளித்திருப்பதன் எதிரொலியாக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கைதாக வாய்ப்புள்ளது. இதையடுத்து, மூத்த வக்கீல்களுடன், ஜார்கிகோளி சகோதரர்கள் ஆலோசனை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
இளம்பெண் வாக்குமூலம்
கர்நாடக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளியும் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதுபோல், இளம்பெண்ணும் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் சிறப்பு விசாரணை குழு போலீசார், ரமேஷ் ஜார்கிகோளியிடம் 3 முறை விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். இதற்கிடையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் 28 நாட்களாக தலைமறைவாக இருந்த இளம்பெண் நேற்று முன்தினம் சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதியிடம் 2 மணிநேரம் வாக்குமூலம் அளித்திருந்தார். இளம்பெண்ணிடம் முதற்கட்ட விசாரணை நடத்தி சிறப்பு விசாரணை குழு போலீசாரும் தகவல்களை பெற்றுள்ளனர்.
ரமேஷ் ஜார்கிகோளி கைதாக வாய்ப்பு
இந்த நிலையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் நீதிபதியிடம் இளம்பெண் வாக்குமூலம் அளித்திருப்பதாலும், அவரிடம் போலீசாரும் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருப்பதாலும், கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் பதிவான கற்பழிப்பு வழக்கில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்புள்ளது. இளம்பெண், போலீசாரிடம் அளிக்கும் வாக்குமூலம், ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராக அவர் அளிக்கும் சாட்சி, ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இளம்பெண்ணிடம் நேற்றும் 2-வது நாளாக போலீசார் விசாரித்திருந்தனர். இதையடுத்து, தன்னை 2 முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்றும், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து, சம்பவம் நடந்திருப்பதாகவும் இளம்பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணை, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட போலீசார் தீர்மானித்துள்ளனர்.
முன் ஜாமீன் பெற முடிவு?
இந்த நடவடிக்கைகள் முடிந்த பின்பு ரமேஷ் ஜார்கிகோளியை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்ப வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர் விசாரணைக்கு ஆஜரானால், இளம்பெண் அளித்த தகவல்களின் பேரில் ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதன் காரணமாக ரமேஷ் ஜார்கிகோளிக்கு போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற பீதி உருவாகி இருக்கிறது.
இதையடுத்து, அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனது சகோதரர்களுடன், ரமேஷ் ஜார்கிகோளி ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கோர்ட்டில் முன் ஜாமீன் பெறுவது, மேலும் தன்மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய கோரி நேரடியாக ஐகோர்ட்டில் வழக்கு தொடருவது என 2 முக்கிய முடிவுகளை எடுக்க ரமேஷ் ஜார்கிகோளிக்கு வாய்ப்புள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மூத்த வக்கீல்களுடன் ரமேஷ் ஜார்கிகோளியின் சகோதரர்களான பாலசந்திர ஜார்கிகோளி, லக்கான் ஜார்கிகோளி ஆகிய 2 ேபரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
வக்கீல்களுடன் ஆலோசனை
அதாவது டெல்லியை சேர்ந்த 4 மூத்த வக்கீல்கள், பெங்களூருவில் உள்ள 2 மூத்த வக்கீல்களுடன் ரமேஷ் ஜார்கிகோளியின் சகோதரர்கள் நேற்று தொடர்ந்து ஆலோசனை நடத்தி உள்ளனர். வக்கீல்கள் கூறும் அறிவுரையின்படியே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ரமேஷ் ஜார்கிகோளி, அவரது சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர். ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருவதால், ரமேஷ் ஜார்கிகோளி யாருடைய தொடர்பிலும் இல்லாமல், ரகசிய இடத்தில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இளம்பெண் ஆஜரானதும், மராட்டிய மாநிலத்தில் உள்ள கோவிலில் நேற்று முன்தினம் ரமேஷ் ஜார்கிகோளி சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு, அவர் எங்கு சென்றார்? என்பதே தெரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. தனது சகோதரர் பாலசந்திர ஜார்கிகோளியுடன் மட்டுமே அவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.