அசாமில் மந்திரியை கொல்ல பயங்கரவாதிகள் சதி திட்டம்; 3 பேர் கைது
அசாமில் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கவுகாத்தி,
அசாமில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அசாமில் மந்திரியாக ஹிமந்தா பிஸ்வா சர்மா இருந்து வருகிறார்.
அவரை துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு தாக்கி கொல்வதற்கு சில அடையாளம் தெரியாத நபர்கள் அடங்கிய குழு ஒன்று சதி திட்டம் தீட்டியுள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் உல்பா பயங்கரவாதிகள் இந்த சதி திட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.
இந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் உல்பா அமைதி பேச்சுவார்த்தை குழு தலைவர் ஒருவரும் உள்ளார்.
அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர். இந்த சதி திட்டத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.