மக்களின் தயக்கம் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கத்தில் மந்தமாக இருந்தது - மத்திய அரசு தகவல்
இணையதள கோளாறு, மக்களின் தயக்கம் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கத்தில் மந்தமாக இருந்தது என சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே கூறினார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நடந்து வரும் தடுப்பூசி பணிகள் குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே எழுத்து மூலம் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியாவில் 21 நாட்களில் 50 லட்சம் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது உலக அளவில் மிகவும் வேகமான விகிதம் ஆகும். ஜனவரி 31-ந்தேதி வரை 93.6 லட்சம் சுகாதார பணியாளர்கள் மற்றும் 77.9 லட்சம் முன்கள பணியாளர்கள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் 31-ந்தேதி வரை 37.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது’ என்று கூறினார்.
‘கோ-வின்’ இணையதளத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மக்களிடையே தடுப்பூசி போடுவதில் இருந்த தயக்கம் காரணமாக தொடக்கத்தில் எதிர்பார்த்ததை விட தடுப்பூசி பணிகள் மந்தமாக இருந்ததாக கூறிய மந்திரி, பின்னர் படிப்படியாக இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு பணிகள் வேகமெடுத்ததாக கூறினார்.
தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.