டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்பு

சர்வதேச பெண்கள் தினமான இன்று டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-03-08 06:32 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். 

டெல்லி-அரியானா எல்லையான டிக்ரி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 28-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த போராட்டம் இன்று 102-வது நாளை எட்டியது.

போராட்டம் தொடங்கி 100 நாட்களை கடந்த போதும் இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் உறுதியாக உள்ளனர். ஆனால், சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும், அது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருதரப்பிற்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில், சர்வதேச பெண்கள் தினமான இன்று பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த நுற்றுக்கணக்கான பெண்கள் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

டிக்ரி பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற நடிகை சோனியா மென்,’அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க பெண்கள் முன்வரவேண்டும்’ என்றார்.  

மேலும் செய்திகள்