தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை அகற்ற வேண்டும் - தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் மனு

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-03-04 01:34 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில், மந்திரி பிர்ஹத் ஹக்கிம் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவினர், கொல்கத்தாவில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர், மந்திரி பிர்ஹத் ஹக்கிம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த தேர்தலில் பிரதமர் மோடி பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக இருக்க வாய்ப்புள்ளது. அரசியல்வாதி என்ற முறையில், தனது கட்சிக்கு அவர் ஆதரவு திரட்டுவார்.

இந்த சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் மோடியின் புகைப்படம் இடம்பெறுவது வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்துவது ஆகும். இது, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல்.

அதுபோல், பெட்ரோல் விற்பனை நிலையங்களில், மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் விளம்பர பலகைகள் உள்ளன. அவற்றிலும் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இவையெல்லாம் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தும் செயல்கள். ஆகவே, தேர்தல் கமிஷன் தலையிட்டு, சான்றிதழிலும், விளம்பர பலகைகளிலும் மோடி படத்தை அகற்றச் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பா.ஜனதா நிராகரித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:-

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தொடங்கப்பட்ட அரசு திட்டமாக இருந்தால், அதே வடிவத்தில் தொடரலாம். கொரோனா தடுப்பூசி போடுவது தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தொடங்கி விட்டது.

அதுபோல், பெட்ரோல் விற்பனை நிலையங்களில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளம்பரப்பலகைகள் வைக்கப்படுகின்றன. அவை தனியார் நிலத்தில்தான் உள்ளன. எனவே, இவையெல்லாம் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்