வங்கி பெண் அதிகாரியை தாக்கிய வழக்கில் ஆந்திராவை சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை - பெங்களூரு கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் வங்கி பெண் அதிகாரியை தாக்கிய வழக்கில் கைதான ஆந்திராவை சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2021-02-02 19:16 GMT
கோப்புப்படம்
பெங்களுரு, 

பெங்களூரு நகரில் வசித்து வருபவர் ஜோதி உதய். இவர், பெங்களூருவில் உள்ள வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக ஜோதி உதய் சென்றிருந்தார். 

அப்போது அங்கு வந்த ஒரு நபர், ஜோதி உதயிடம் அரிவாளை காட்டி பணம் கொடுக்கும்படி கேட்டு மிரட்டினார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அந்த நபர் அரிவாளால் கொடூரமாக ஜோதி உதயை தாக்கினார். பின்னர் அவரிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை அந்த நபர் கொள்ளையடித்து சென்றிருந்தார்.

ஜோதி உதயை, அந்த நபர் தாக்கும் காட்சிகள் வெளியாகி, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவந்தார்கள். ஆனால் அந்த நபர் கிடைக்கவில்லை. பின்னர் 4 ஆண்டுகளுக்கு பின்பு தான் ஜோதி உதயை தாக்கியதாக, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மதுகர் ரெட்டி என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர்.

அதாவது கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வழக்கு ஒன்றில் மதுகர் ரெட்டியை ஆந்திர போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால் அவர் தான் ஜோதி உதயை தாக்கியவர் என்று தெரியாமல் இருந்தது. 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் ஜோதி உதயை தாக்கி பணம், பொருட்களை மதுகர் ரெட்டி கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, 2017- ஆண்டு மே மாதம் 8-ந் தேதி ஆந்திரா போலீசார் வசம் இருந்த மதுகர் ரெட்டியை, எஸ்.ஜே.பார்க் போலீசார் கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் வங்கி பெண் அதிகாரியை தாக்கிய வழக்கில் கைதான ஆந்திராவை சேர்ந்த மதுகர் ரெட்டி மீதான குற்றம் ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளதால், அவர் குற்றவாளி என்றும், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு 2-ந் தேதி (அதாவது நேற்று) கூறப்படும் என்றும் நீதிபதி ராஜேஸ்வரி அறிவித்திருந்தார்.

அதன்படி, வங்கி பெண் அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் நேற்று நீதிபதி ராஜேஸ்வரி தீர்ப்பு கூறினார். அப்போது வங்கி பெண் அதிகாரியை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக மதுகர் ரெட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த வழக்கில் சாட்சிகளை அழித்ததற்காக அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டு மொத்தமாக மதுகர் ரெட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி உள்ளது. வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் தாக்கப்பட்டு 7¼ ஆண்டுகளுக்கு பின்பு குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த வழக்கில் பெண்ணை தாக்கியது நான் தான் என்று நேற்று முன்தினமே நீதிபதியிடம் ஒப்புக் கொண்ட மதுகர் ரெட்டி, உடனடியாக தனக்கு தண்டனை வழங்கும்படி நீதிபதியிடம் கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் கடுமையான தண்டனை வழங்கி இருக்கலாம் - வங்கி பெண் அதிகாரி

பெங்களூருவில் வங்கி அதிகாரியாக இருந்து வருபவர் ஜோதி உதய். இவரை தாக்கியதாக கைதான ஆந்திராவை சேர்ந்த மதுகர் ரெட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். இதுகுறித்து ஜோதி உதய் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ஏ.டி.எம். மையத்தில் என்னை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்றதால், பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளானேன். 6 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். 

வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது இந்த வழக்கில் 10 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கி இருக்கலாம். கூடுதல் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். கோர்ட்டு தீர்ப்பால் என்னால் சமாதானம் ஆகவில்லை. என்றாலும் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன், என்றார்.

வங்கி பெண் அதிகாரி ஜோதியை தாக்கிய வழக்கில் 4 ஆண்டுக்கு பின்பு தான் மதுகர் ரெட்டி கைதாகி இருந்தார். அவரை பிடிக்க கர்நாடகம், ஆந்திராவை சேர்ந்த 400 போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அவரை பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று பெங்களூரு போலீசார் அறிவித்திருந்தனர். 

அதே நேரத்தில் மதுகர் ரெட்டியின் உருவப்படத்துடன் கூடிய 4 ஆயிரம் பிட் நோட்டீசுகளை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகத்தில் பல பகுதிகளில் போலீசார் வினியோகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்