சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை - தேவஸ்தான தலைவர் தகவல்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறினார்.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
முதலில் தினமும் ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு அந்த எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதற்கிடையில் சபரிமலையில் நேற்று முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு தொடங்கவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று வழக்கம்போல் குறைந்த பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி சபரிமலையில் தேவஸ்தான தலைவர் வாசு நிருபர்களிடம் கூறியதாவது:-
20-ந் தேதி முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
மேலும் தலைமைச்செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான உயர்மட்டக் குழுவும் ஒப்புதல் வழங்கியது. ஆனால் இதுதொடர்பாக அரசு தரப்பில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. அரசின் உத்தரவு வந்தவுடன், சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக ஆன்லைன் முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும்.
கேரளாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் கூடிவருவதால் மகரவிளக்கை முன்னிட்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் மலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆர்.டி. பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைக்குப் பின், கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்படும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தரிசனத்துக்கு 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட பரிசோதனைக்கான நெகட்டிவ் சான்றிதழை பக்தர்கள் கொண்டுவர வேண்டும். டிசம்பர் 31-ந் தேதி முதல் ஜனவரி 19-ந் தேதி வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும். மண்டல சீசனில் சபரிமலை வருவாய் மிகவும் குறைந்த நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கேரள அரசு ரூ.20 கோடி சிறப்பு நிதியாக வழங்கியுள்ளது.
மேலும் வருவாய் இழப்பை கருத்தில் கொண்டு கடந்த 6 மாத காலத்தில் தேவஸ்தானத்துக்கு கேரள அரசு ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது” என்று அவர் கூறினார்.