நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - ஆய்வில் தகவல்
நாட்டில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தேசிய குடும்ப சுகாதார கருத்துக் கணிப்பை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. இதன், ஐந்தாம் ஆண்டு கருத்துக் கணிப்புகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன், நேற்று முன் தினம் வெளியிட்டார்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 22 பிரதேசங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் மக்கள் தொகை, சுகாதாரம், சத்துணவு போன்றவை தொடர்பான தகவல்கள் கண்டறியப் பட்டுள்ளன.
இதில் 17 பிரதேசங்களில் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. 17 பிரதேசங்களில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் போதிய சத்துணவு இன்றி எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
அசாம், பீகார், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, ஆந்திரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், கர்நாடகா, கோவா, மராட்டியம், மேற்கு வங்காளம் , மிசோரம், கேரளா, லட்சத்தீவு, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டையூ -டாமன்) ஆகிய பகுதிகளில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
கோவிட் -19 காரணமாக மீதமுள்ள 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டு 2021 மே மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015-16ம் ஆண்டு தரவுகளுடன் ஒப்பிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.