தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு உச்சவரம்பை உயர்த்த தேர்தல் கமிஷன் பரிசீலனை
மக்களவை, சட்டசபை தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பை உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. இதில், அரசியல் கட்சிகளின் கருத்தை தேர்தல் கமிஷன் நாடி உள்ளது.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தலின்போது வேட்பாளர்கள் செய்கிற செலவுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வரம்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு வேட்பாளர்கள் செலவு தொகை உச்ச வரம்பு திருத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு உச்சவரம்பு மாற்றி அமைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் வேட்பாளர்கள் பிரசாரத்தின்போது பல்வேறு சிரமங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளதால் தேர்தல் கமிஷன் பரிந்துரை பேரில், வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பை அரசு 10 சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.
தற்போது தமிழகம், ஆந்திரா, அசாம், பீகார், குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம், மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், உத்தரகாண்ட், ஜார்கண்ட், தெலுங்கானா மற்றும் டெல்லியில் மக்களவை தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு உச்சவரம்பு ரூ.77 லட்சம், சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பு ரூ.30.8 லட்சம் ஆகும்.
மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகியவற்றில் மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பு ரூ.77 லட்சம், சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பு ரூ.22 லட்சம் ஆகும்.
அருணாசலபிரதேசம், கோவா, சிக்கிம், அந்தமான் நிகோபார், சண்டிகார், தத்ராநகர் ஹவேலி, டாமன் தியு, லட்சத்தீவு, புதுச்சேரி, லடாக்கில் மக்களவை தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பு ரூ.59.4 லட்சம், சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பு ரூ.22 லட்சம் ஆக உள்ளது.
வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, செலவு பணவீக்க குறியீடு உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தலின்போது வேட்பாளர்கள் செலவு வரம்புகளை உயர்த்த தேர்தல் கமிஷன் பரிசீலிக்கிறது. இது குறித்து ஆராய்ந்து பரிந்துரைக்க தேர்தல் கமிஷனின் தலைமை இயக்குனர் உமேஷ் சின்கா, முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஹரிஷ்குமார் ஆகியோரை கொண்ட குழுவை தேர்தல் கமிஷன் கடந்த அக்டோபர் மாதம் அமைத்துள்ளது.
குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 83 கோடியே 40 லட்சத்தில் இருந்து 2019-ல் 92 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதே போன்று செலவு பணவீக்க குறியீடு 220-ல் இருந்து 2019-ல் 280 ஆகவும், தற்போது 301 ஆகவும் இருப்பது கருத்தில் கொள்ளப்படுகிறது.
தற்போது இந்த பிரச்சினையில் அரசியல் கட்சிகளின் கருத்தை அறிய தேர்தல் கமிஷன் விரும்புகிறது.எனவே எதிர்காலத்தில் மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பு எவ்வளவு என நிர்ணயிக்கலாம் என்பது குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவிக்குமாறு தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் கடந்த 7-ந் தேதி கடிதம் எழுதி உள்ளது.தேர்தல் கமிஷன் அமைத்துள்ள குழுவின் நோடல் அதிகாரிக்கு (தொடர்பு அதிகாரி) தங்கள் கருத்துக்களை அரசியல் கட்சிகள் அனுப்பி வைக்க வேண்டும்.
அவற்றை அந்தக்குழு பரிசீலித்து தேர்தல் கமிஷனுக்கு தனது பரிந்துரையை அளிக்கும். அதை தேர்தல் கமிஷன் ஆராய்ந்து, தனது முடிவை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தெரிவிக்கும். அதன்பின்னர் மக்களவை, சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.