வரும் 8 ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திற்கு காங்கிரஸ் ஆதரவு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
11-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் 8-ம் தேதி விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். இந்த முழு வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பவன் கேரா இந்த தகவலை தெரிவித்தார். பவன் கேரா கூறுகையில், “ விவசாயிகளின் பாரத் பந்திற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எங்கள் கட்சி அலுவலகங்களின் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்”என்றார்,