“எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது” - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்துள்ளார்.

Update: 2020-12-02 15:37 GMT
புதுடெல்லி,

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கடந்த சில நாட்களுக்கு முன் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் கற்க வகை செய்யும்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதற்காக ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய் வழிக்கல்வியில் படிக்க வகை செய்யும் ‘டாஸ்க் ஃபோர்ஸ்’ (Task force) குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அந்த குழுவில் இடம் பெற்றவர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசினார். அப்போது அவர், எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று தெரிவித்தார். 

மேலும் ஆங்கிலம் பயிலாத மாணவர்கள் தொழில்நுட்ப கல்வியை தாய் மொழியில் கற்பதற்கு எவ்வாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்த முழுமையான அறிக்கை ஒரு மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்