அந்தமான் அருகே சட்ட விரோதமாக மீன்பிடித்த மியான்மர் நாட்டு மீனவர்கள் கைது
அந்தமான் அருகே சட்ட விரோதமாக மீன்பிடித்த மியான்மர் நாட்டு மீனவர்கள் 12 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
போர்ட்பிளேர்,
இந்திய கடலோர காவல்படையின் கண்காணிப்பு ஹெலிகாப்டர் ஒன்று நேற்று அந்தமான் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ரத்லாந்து தீவுக்கரையில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகத்துக்கிடமான வகையில் படகு ஒன்று செல்வதை கண்டுபிடித்தது. உடனே அந்த படகுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியது. ஆனால் அதில் இருந்து பதில் வரவில்லை.
இதைத்தொடர்ந்து ரோந்து விமானம் மற்றும் ‘ராஜ்கிரண்’ கப்பலுக்கு தகவல் அனுப்பி சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி அந்த இடத்தை கப்பலும், விமானமும் நெருங்கியதும், அந்த படகு அங்கிருந்து தப்ப முயன்றது. உடனே அதை கடலோர காவல்படை கப்பல் வழிமறித்து நிறுத்தியது.
அப்போது அது மியான்மர் நாட்டு படகு என்பதும், அது இந்திய பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து படகை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், படகில் இருந்த 12 மீனவர்களையும் கைது செய்து அந்தமான் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்தமான் கடற்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.