இஸ்ரோ குழு, தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் சிறப்புடன் பணியாற்றியது; இஸ்ரோ தலைவர் சிவன்

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பும் பணியில் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இஸ்ரோ குழு சிறப்புடன் பணியாற்றியது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Update: 2020-11-07 12:25 GMT
ஸ்ரீஹரிகோட்டா,

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் ஆனது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி, 26 மணி நேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று மாலை 3.12 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ்.01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டிருந்தது.  இந்த செயற்கைகோள் 4வது நிலையில் இருந்து தனியாக பிரிந்து வட்டபாதையில் வெற்றிகரம் ஆக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இதேபோன்று வணிக பயன்பாட்டிற்கான லிதுவேனியா நாட்டை சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்கள் என அனைத்து 9 செயற்கைகோள்களும் வெற்றிகரம் ஆக ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து அவற்றிற்குரிய வட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.

இதுபற்றி இஸ்ரோ தலைவர் சிவன் கூறும்பொழுது, இஸ்ரோவுக்கு இந்த திட்டம் சிறப்பு வாய்ந்தது.  வழக்கத்திற்கு மாறானது.  ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணியை வீட்டில் இருந்து பணியாற்ற முடியாது.  ஒவ்வொரு பொறியியலாளரும் ஆய்வகத்தில் இருக்க வேண்டும்.  இதுபோன்ற திட்டங்களை பற்றி பேசும்பொழுது, ஒவ்வொரு தொழில்நுட்ப பணியாளரும், ஊழியரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கூறினார்.

கொரோனா தொற்று காலத்தில் இஸ்ரோ குழு, தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்புடன் பணியாற்றியது.  இந்நேரத்தில் இஸ்ரோ பணியாளர்கள் அனைவரும் தரம் நிறைந்த பணியை செய்தனர் என்பது உண்மையில் மனமகிழ்ச்சியை தருகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்