காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு ஹிஜ்புல் பயங்கரவாதிகள் உள்பட 200 பேர் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் உள்பட 200 பேர் இந்த ஆண்டு நடந்த என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2020-11-03 05:47 GMT
புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய ராணுவம் மற்றும் மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  அவர்களை சவாலாக எடுத்து கொண்டு இந்திய பாதுகாப்பு படைகள் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த அக்டோபர் வரையில் நடந்த என்கவுண்ட்டரில், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 200 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதில் கடந்த ஜூனில் அதிக அளவாக 49 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது இரு மடங்காகும்.  இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரலில் 28 பயங்கரவாதிகளும், ஜூலை மற்றும் அக்டோபரில் தலா 21 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இவற்றில் தெற்கு காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் மிக அதிக அளவாக 138 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  காஷ்மீரின் சோபியான் மற்றும் புல்வாமா போன்ற பகுதிகளில் உள்ளூர் இளைஞர்களை பயங்கரவாத குழுக்கள் பணிக்கு அமர்த்துவது அதிகம் காணப்படுகிறது.  இந்நிலையில் இங்கு நடந்த என்கவுண்ட்டரில் மொத்தம் 98 பயங்கரவாதிகள் (2 மாவட்டங்களிலும் தலா 49 பேர்) சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இருந்த 72 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதுதவிர, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் 59 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தில் செயல்பட்டு வந்த 37 பயங்கரவாதிகள் இந்த ஆண்டில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  இவர்கள் தவிர ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 32 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் கொல்லப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்