ஒடிசா கவர்னர், மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ஒடிசா கவர்னர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் கொரோனா பாதிப்புகளுக்கு 12,930 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,331 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒடிசா கவர்னர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி மாநில முதல் மந்திரி நவீன் பட்னாயக் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒடிசாவின் மதிப்பிற்குரிய கவர்னர், பேராசிரியர் ஸ்ரீ கணேஷி லால் ஜி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என அறிந்து வேதனை அடைந்தேன்.
ஒடிசாவின் மதிப்பிற்குரிய முதல் பெண்மணியான சுசீலா தேவிக்கும் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என அறிந்து வேதனை அடைந்தேன். அவர்கள் இருவரும் குணமடைந்து திரும்ப வேண்டும். அவர்கள் உடல்நலம் பெற வேண்டும் என வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.