உ.பியில் இரண்டு இளவரசர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் பீகாரிலும் ஏற்படும்: பிரதமர் மோடி கடும் தாக்கு
பீகாரில் முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள அடுத்தக் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு நிறைவடைகிறது.
பாட்னா,
பீகாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகியதேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள அடுத்தக் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு நிறைவடைகிறது. இதையொட்டி பீகாரில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பீகாரில் ஆளும் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று இன்று பிரசாரம் மேற்கொண்டார். சாப்ரா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். பிரதமர் மோடியுடன் முதல்வர் நிதிஷ் குமாரும் உடனிருந்தார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியமைப்பார் என்பது தெளிவாகியிருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் முன்பு 2 இளவரசர்கள் சேர்ந்து வந்து வாக்கு கேட்டார்கள். (ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்) அந்த மாநிலத்தை கபளீகரம் செய்யலாம் என திட்டமிட்டனர். ஆனால் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டினர். அதுபோலவே பீகாரில் தற்போது இரண்டு இளவரசர்கள் சேர்ந்துள்ளனர். (ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்) அவர்களில் ஒருவர் காட்டு தர்பாரில் இருந்து வந்தவர். உத்தர பிரதேசத்தில் இளவரசர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் பீகாரிலும் ஏற்படும்” என்றார்.