இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவு; 10 லட்சத்தில் 81 பேர் பலி: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவு என்றும் 10 லட்சம் மக்கள் தொகையில் 81 பேரே உயிரிழந்து உள்ளனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்புகளை பெற்றிருக்கும் நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவில் தொற்றின் வேகம் சரிந்து வருகிறது. சுமார் ஒரு லட்சம் எட்டும் அளவுக்கு உயர்ந்த தினசரி பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.
அதேநேரம் நாள்தோறும் தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைந்து உள்ளது. 10 லட்சம் மக்கள் தொகையில் 81 பேரே உயிரிழந்து உள்ளனர். கடந்த அக்டோபர் 2ந்தேதியில் இருந்து 1,100க்கும் குறைவான உயிரிழப்புகளே தொடர்ந்து பதிவாகி வந்துள்ளன.
நாட்டின் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறந்த செயல்பாடுகளால் 10 லட்சம் பேரில் உயிரிழப்பு விகிதம் என்பது குறைந்து உள்ளது.
இதேபோன்று, தொடர்ந்து உயிரிழப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. நாட்டில் உள்ள 1.52% உயிரிழப்பு விகிதம் என்பது 2020ம் ஆண்டு மார்ச் 22ந்தேதியில் இருந்து மிக குறைந்த அளவாகும் என்று தெரிவித்து உள்ளது.